Thursday, October 28, 2010

நிதர்சனம்....

                   அலுவலகம் முடிந்து வெளியே வந்த நான், என் டூ வீலரின் நிலைமையை பார்த்து அதிர்ந்து போனேன். சரியாக வண்டியின் முன் பகுதி முழுவதும் வெள்ளையும் கருப்பும் கலந்து பெயிண்ட் கொட்டியது போல ... வள வளப்பாய் .... அருவருப்பாய் .....

                வேறென்ன?  ஏதோ ஒரு பறவையின் எச்சம்தான் .

              அனிச்சையாக என் பார்வை மேலே எழ, மேலே அந்த பறவை என்ன இன்னுமா உட்கார்ந்துகொண்டிருக்கும் வேடிக்கை பார்க்க? என்ன செய்வது...?    வழக்கம்போல் துணி எடுத்து துடைக்க முயற்சித்தேன். என்ன புண்ணியம். அது ஆசிட் போலே அப்படியே 'பச்சக்' என்று ஒட்டிகொண்டிருந்தது. இங்கும் அங்கும் திரும்பிபார்த்தேன். வேறு ஏதாவது வண்டிக்கு இப்படி சேதாரம் ஆகி உள்ளதா என தேடிபார்த்தேன். ம் ஹும்... நமக்கு வந்த துன்பம் மற்றவர்களுக்கும் வந்தால் கிடைக்கும் ஒரு ஆறுதல் கூட கிடைக்கவில்லை..  

                 துடைக்க துடைக்க கரை போகாததால் லேசாக ஆத்திரம் தலைக்கு ஏற என்ன செய்யலாம் என யோசித்தேன் . கோபம்தான் மிஞ்சியது . வீட்டில் போய் கழுவிப் பார்க்கவேண்டும் . போகவில்லைஎன்றால் சர்விசுக்குதான் விடவேண்டும் ... தெண்ட செலவு...நமக்கு மட்டும் ஏன் இப்படி ? மனம் வெதும்பியது. வண்டி வீட்டை  நோக்கி ஓட, என் சிந்தனையும் ஓடியது.

                எதையுமே பாசிடிவ் ஆக எடுத்துகொள்ளவேண்டும் என எத்தனை முறை படித்திருப்போம்? , எத்தனை முறை  கேட்டிருப்போம் ? இருந்தும் ஏன் மனம் இத்தனை ஆர்பாட்டம் பண்ணுகிறது? சரி! இதை அப்படியே பாசிடிவ் ஆக நினைத்துதான் பார்ப்போமே என சிந்தனை ஓட ...என் உள்மனம் சம்மனமிட்டு அமர்ந்தது. 

                எச்சமிட்ட அந்த பறவை நம் வண்டியில் ஏன் எச்சமிடவேண்டும்? அதற்கு ஏதாவது காரண காரியம் இருக்கத்தான் வேண்டும். இனி நான் என்ன செய்ய போகிறேன்? வண்டியை சர்விஸ் சென்டருக்கு கொண்டுபோக போகிறேன். அதனால் சர்விஸ் சென்டருக்கு என்னால் வருமானம். சர்விஸ் சென்டரில் வேலை செய்பவர்களுக்கு அதனால் சம்பளம் .. அந்த சம்பளத்தால் அவர்கள் குடும்பத்திற்கு சாப்பாடு..ஆக   , இது ஒரு செயின் ரியாக்சன் மாதிரி! எந்த ஒரு செயலும் ஒரு காரண காரியம் இல்லாமல் செயல் படாது. வண்டி சர்விசுக்கு போவதால் நான் பஸ்ஸில் போகவேண்டிவரும் , அதனால் பஸ் சுக்கு வருமானம். அதைகொண்டு பிழைப்பு கொண்டவர்களுக்கு அதன் மூலம் சில பயன்கள். இப்படித்தான் வாழ்க்கையில் எல்லாமே காரணமாகத்தான் நடக்கிறது. இதில் கோபம் கொள்ள ஏதும் இல்லை என மனம் அழகாக பாடம் சொன்னது.  மனம் ஆறுதல் அடைந்தது போல் இருந்தது.

                   அதேபோல மறுநாள் நான் வண்டியை சர்விசுக்கு விட பஸ்ஸில் பயணித்தேன். வண்டி இல்லாத நேரத்தில் மற்ற வேலைகள் எல்லாமே மாறி மாறி நடக்க என் மனமோ இது எல்லாமே ஒன்றின் விளைவுகள், விதிக்கப்பட்டவைகள் என ஓதிக்கொண்டே இருந்தது.  ஒரு வழியாக என் வண்டியும் சர்விஸ் முடிந்து வந்துவிட என் வழக்கமான பணிகளும் தொடர அனாவசியமாக ஒரு சின்ன நிகழ்வை கொண்டு எவ்வளவு கோபம் கொள்கின்றோம்? அதை பாசிடிவ் ஆக எடுப்பதனால் எவ்வளவு அமைதி... ஆனந்தம்....இதை ஏன் மனம் எப்போதும் எல்லா விசயங்களிலும் எடுத்துகொள்வதில்லை ? இதுபோல் எதையும் பாசிடிவ் ஆக எல்லோரும் எடுத்துகொண்டால் எவ்வளவு நலமாக இருக்கும். எந்த சண்டை சச்சரவும் வர வாய்ப்பே இல்லாமல் போய்விடும் அல்லவா?  உலகமே இதனால் அமைதி பூங்கா வாகி விடாதா?   என என் மனம் தான் எவ்வளவு பக்குவமாக உணர ஆரம்பித்தது!

                       ஆயிற்று, சாந்தமான என் மனம் அன்று முழுவதும் எல்லா வேலைகளையும் ஆனந்தமாக முடிக்க நான் அலுவலகம் விட்டு வெளியில் வந்து என் வண்டியை எடுக்........

                                             என்ன்ன இது? வெள்ளையும் கருப்பும் கலந்து பெயிண்ட் கொட்டியதுபோல...                                                  

(மேலே அண்ணாந்து பார்த்த நான் வேகமாக கீழே குனித்து நல்ல கல்லாக ஒன்றை தேடினதும், மறுநாள் முதல் 5 நிமிடம் முன்னால் வந்து வேறு இடத்தில் வண்டியை நிறுத்த தொடங்கியதும் வேறு கதை...)    .

Monday, October 25, 2010

மு. ஹபி: எல்லா புகழும் இறைவனுக்கே ! நானும் எழுத விழைந்து ,...

மு. ஹபி: எல்லா புகழும் இறைவனுக்கே !

நானும் எழுத விழைந்து ,...
: "எல்லா புகழும் இறைவனுக்கே ! நானும் எழுத விழைந்து , ஒரு பக்கத்தை பிரசவித்து, அதற்கு ஒரு பெயரிட்டு அழைக்க , இதோ கண் திறந்து பார்கிறேன் ! ..."