Wednesday, November 3, 2010

வழி வழி தீபாவளி....!

              அரக்க பறக்க முகத்தை அவசர அவசரமாக கழுவிக்கொண்டு தலையையும் வாரிக்கொண்டு வெளியில் ஓடினாள் செல்வி.
         
              'ச்சே ... நாம்தான் 'லேட்' டாகிவிட்டோம் . எல்லோரும் தொடங்கிவிட்டார்கள்' என்று அலுத்துகொண்டவளாக பட்டாசு பெட்டிகளை பார்த்தாள்.

               ஒன்று..இரண்டு..மூன்று.... மொத்தம் ஆறு பெட்டிகள். திருப்பதியாக இருந்தது செல்விக்கு.

             முதலில் எந்த பெட்டி...? வெடிகள்...! அதுதான் சரி. இருட்டுமுன் வெடிகளை விட்டுவிட்டால் இருட்டியபின் மத்தாபுகளை விடலாம்.

               குருவி வெடியில் தொடங்கி காதுகளை பிளக்கவைத்த சத்தம் அடுத்து வெடித்த அணுகுண்டுகளால் அதிரத்தொடங்கியது. அடுத்த சரவெடியில் அந்த ஏரியாவே கலகலத்துப்போக சத்தம் அடங்க ஐந்து நிமிடம் ஆனது. 'தௌசன் வாலா' வெடியை அனுபவிப்பது இதுதான் முதல் முறை. அம்மாடியோவ்...என்ன சத்தம்!

                   ஆயிற்று...ஒரு பெட்டி வெடிகள் முடிந்து போயின. இனி அடுத்த பெட்டி. அதிலே வேறு விதமான வெடிகள். அத்தனையும் புது ரகம். இந்த வருடம் தான் மார்கட்டுக்கு வந்த வெடிகள். ஒவ்வன்றாக வெடிக்க வெடிக்க செல்வி பூரித்துப்போனாள். அடுத்த பெட்டி ஆரம்பிக்கும் போது பொழுது சாய்ந்து இருட்டதொடங்கியதால், மத்தாப்புக்கள் வண்ண வண்ணமாய் சிதற...பூப் பூவாய் எதனை ஜாலங்கள்! கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம் ... அதில்தான் எத்தனை ரகம்! புஸ்வான மத்தாப்பு விடும்போதுதான் எத்தனை குதூகலம். சக்கரங்கள் சுழலும் போதெல்லாம் அதன் தெறிக்கும் சுடரில் ஓடி  ஓடி மிதித்து ஆரவாரம பண்ண எத்துனை மகிழ்ச்சி!

               அடுத்தது எல்லாம் ராகெட் வெடிகள். இந்த வருடத்து விசேசமே இந்த வெடிகள் தான். ஒவ்வன்றாய் பற்றவைக்க அது மேலே எழுந்து வெடித்து பூ பூவாய் சிதற எத்தனை நிறங்கள். ஆஹா... கண்கொள்ளா காட்சி....ஒவ்வொன்றும் ஒரு ரகம்.  வானமே  வண்ண வண்ண மலர்களால் நிரம்பியது போல ... மனதிற்குத்தான் எத்தனை மகிழ்ச்சி! போன வருட தீபாவளியை விட இந்த வருடம்தான் மிகவும் குதூகலமாக இருந்தது.

              இன்னும் இரண்டு பெட்டிகள் பாக்கியிருக்கும் போதுதான் அந்த குரல் கேட்டது.

              'எல்லாரும் சாப்பிட வாங்க..... சாப்பாட்டுக்கு அப்புறமா மீதியை வெடிக்கலாம்....'
             
              அதுவரை வெடிகளில் லயித்திருந்த மனது பசியை உணர்ந்தது.
            
               பக்கத்துக்கு தெருவில் வெடி விடுவதை இதுவரை வேடிக்கை பார்த்த செல்வி, வீட்டில் சாப்பிட பலகாரங்கள் ஏதாவது வந்திருக்குமா...என வாயில் நீர் ஊற கற்பனையுடன் தன குடிசையை  நோக்கி ஓட தொடங்கினாள்.

2 comments:

  1. முடிவை யூகிக்க முடியாமல் நகர்ந்து சென்ற கதை.... செல்வியுடன் சேர்ந்து நாமும் வெடிக்கும் வெடிகளையும் , சிதறும் மத்தாப்புகளையும் வேடிக்கை பார்த்ததுபோல் இருந்தது.

    ReplyDelete
  2. செல்வி ‘இழந்ததை’ கதை மீட்டு விட்டது

    ReplyDelete