Monday, November 8, 2010

கறை!

               வங்கியின் வாசலுக்கு வந்து சேர்ந்த வேணுகோபாலன் அது இன்னும் திறக்கபடாதது கண்டு சற்றே ஆறுதல் அடைந்தவராக தன்னை ஆசுவாசப்படுதிகொண்டார்.

                  தன் கை கடிகாரத்தில் மணி பார்த்தார். பத்தாக இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. நல்ல வேளையாக  இன்னும் யாரும் வரவில்லை. நாம் தான் முதல் ஆள் என்று சுற்றும் முற்றும் பார்த்து உறுதி செய்து கொண்டபோதே இன்னும் இருவர் வருவது தெரிந்தது. 

                  பையில் பணம் பத்திரமாக இருக்கிறதா என ஒரு முறை தொட்டு பார்த்து உறுதி செய்துகொண்டவர் முகத்தை துண்டால் அழுந்த துடைத்துகொண்டார். மாதம் பிறந்ததும் ஐந்து தேதிக்குள்  வீட்டு  கடனை வங்கியில் கட்டவேண்டிய பொறுப்பு வயதான தனக்கு கொடுக்கபட்டாலும், அதை அவர் மனமுவந்துதான் ஏற்று கொண்டார். அந்த வேலையினால் சும்மா உட்கார்ந்திருக்கும் தனக்கும் சற்று பொழுது போகும், தன் பிள்ளைக்கும் இந்த வேலையின் பழு சற்றே குறையும். எனவே, இந்த வேலை ஒரு பொருட்டாக படவில்லை.

                       எப்போதும் ஆற அமற வந்து பணம் கட்டிவிட்டு செல்லும் அவருக்கு இந்த முறை மட்டும் உடனே திரும்ப வேண்டிய நிலை. எனவேதான் வங்கி திறக்குமுன்னமே வந்து நின்றுவிட்டார். அப்போதுதான் வங்கி திறந்ததும் உள்ளே நுழைந்து டோக்கன் மெசினில் முதல் நாலைந்து டோக்கனுக்குள் ஒன்றினை எடுத்து விட்டால் வந்த வேலை உடனே முடிந்து விடும். இல்லையேல், தன் நம்பர் வரும் வரை வெகு நேரம் காத்திருக்க வேண்டும். 

               இன்னும் ஓரிரு நிமிடங்களுக்குள் வங்கியின் வாயிலை திறந்து விடுவார்கள் என்று நினைத்தபடி எத்தனைபேர் உள்ளே நுழைய காத்திருக்கிறார்கள் என்று திரும்பிபார்க்கும் போது தான் அவனைப்  பார்த்தார்.

                 தன்னைத் தவிர உள்ள ஐந்தாறு  பேரில் ஒருவனாக அவன் நின்றுகொண்டிருந்தான். தோற்றத்திலியே சற்று முரடனாக இருந்தவனைப் பார்த்ததும் வேணுகோப்லனின் கை அனிச்சையாக தன் சட்டைப் பையை தொட்டுப்பார்து கொண்டது. சீக்கிரமாக கதவை திறந்துவிட்டால் தேவலை. உள்ளே போய் டோக்கனை எடுத்துவிட்டால் ஒரு பக்கமாக பத்திரமாக உட்கார்ந்துவிடலாம் என்று எண்ணியவருக்கு லேசாக வியர்த்தது.

                 வங்கியின் உள்ளிருந்து ஒருவர் கதவுப்பக்கம் வருவது தெரிந்தது. அப்ப்பாடா !  இனி கவலை  இல்லை.

                 வங்கியின் ஆள் கதவை திறந்துகொண்டிருக்கும்போதே கூட்டமாக எல்லோரும் கதவை நோக்கி நகர ஆரம்பித்தனர். அந்த முரட்டு ஆளும் முன்னேற தன் அருகில் வருவது தெரிந்தது. கூட்டம் இப்போது சட்டென்று மொத்தமாக உள்ளே நுழைய, தான் பின்னுக்கு தள்ளபடுவது கண்டு பொறுமை இழந்தார் வேணுகோபால்.  

                      'என்ன இது, கொஞ்சம்கூட நாகரிகம் இல்லாத மக்களாக உள்ளனரே. தான் முதலில் நிற்பது தெரிந்தும், ஒரு வயதானவன் என்ற நினைப்பு கூட இல்லாமல் இப்படி முண்டியடித்துக்கொண்டு நுழைகிறார்களே...' என்று  எண்ணியபடி தானும் உள்ளே நுழைய முற்பட, தன்னை முந்திக்கொண்டு அத்தனைபேரும்  நுழைய.... எங்கே நின்றிருந்தார்கள் இதனை பேரும்...? என்று எரிச்சலுடன் நினைத்தபடி உள்ளே நுழைந்து டோக்கன் மெசின்னை நோக்கி நகர.... தள்ளாடி நடக்கும் தன்னை இடித்தபடி அந்த முரட்டு பாதகனும் முன்னேறி முதல் ஆளாக முந்திக்கொண்டிருந்தான் . கோபம் கொண்டவராக அவனை முறைத்துப்பர்த்தார். அவனோ அவரைப்பார்த்து ஏளனமாக சிரிப்பது போல் தன் கறை படிந்த பல்லை இளித்தான்.

                    டோக்கன் மெசினை நெருங்குமுன்  பத்து பேருக்கு  மேல்  தனக்கு முன்னால் சென்று நின்று விட, உற்சாகம் அத்தனையும் இழந்தவராக தானும் வரிசையில் நின்றுகொண்டவர், தன் இயலாமையும் முதுமையையும் நினைத்து நொந்தவராக, முதலில் வந்தும் இப்படி ஆகிவிட்டதே என்றபடி ஏக்கத்துடன் மெசினைப் பார்த்தார். அந்த முரட்டு மூடன்தான் எல்லார்க்கும் முன்னதாக முதல் டோக்கனை எடுத்துக்கொண்டிருந்தான். அவனுக்கு பின்னால் இருப்பவர்கள் அவனைப்பார்த்து திட்டிகொடிருந்தனர். என்னவோ இவர்கள் மட்டும் நல்லவர்கள் மாதிரி...

                 ' என்ன செய்வது...சண்டாளர்கள்,  எங்கிருந்துதான் வருவார்களோ இப்படி எல்லோரையும் இம்சைபடுத்துவதற்கென்றே....அந்த மூடனுக்குத்தான்  அறிவு இல்லை என்றால், மற்ற சனங்களும் அப்படித்தானே இருக்கிறார்கள்....? ஒரு வயதானவனுக்கு மரியாதைகொடுக்கவேண்டாம், கொஞ்சம் பரிதாபம் படலாமல்லவா.....'

                                'ச்சே...திட்டம் எல்லாம் பாழாகபோனது... சீக்கிரமாய் வந்துதான் என்ன பிரயோஜனம்? இதுபோல முரட்டு ஜென்மங்கள் அறிவில்லாமல் வாழும் நாட்டில் பிறந்ததற்கு வருத்தப்படுவதை தவிர வேறு என்ன செய்யமுடியும்...?'  என்று எல்லோரையும் சபித்தபடி தன் சட்டை பையை தொட்டுப்........
                               
                                    'பகீர்' என்றது வேணுகோபாலுக்கு. அந்த முரடன் தனக்கு அருகினில் நின்று கொண்டிருந்தான். சட்டென்று அவர்  சட்டைப்பையை நோக்கி தன்   கையை கொண்டு சென்றவன் அவர் கையை பிடித்து .....

                     'என்ன இது...?'   எல்லோரும் டோக்கன் எடுக்கும் மும்முரத்தில் இருக்க, இவன் இப்படி செய்வதை யாரும் கவனிக்கவில்லையா' என தன் சட்டை பையை இருகபிடிக்குமுன் அவன் அவர் கையை பிடிக்க, அவர் கூச்சலிட எத்தனித்தபோது...... அவர் கையிலே....  அட. என்ன இது....? அவன் எதையோ கையில் திணிப்பதை போல தெரியுதே .... என்று தன் கையை பார்த்தார் வேணுகோபால்.

                  கையில்... வெள்ளை பேப்பராக....   'டோக்கன் போல தெரியுதே...'என மீண்டும் தன் கையைப்பர்ர்க்க .... ஆம்!  டோக்கனேதான் . அதுவும் நம்பர் 1  என்ற எண் கொண்ட டோக்கன்!

                 திரும்பிபார்த்தவர், அந்த முரடனை தேடினார்.

                 அவன் அங்கே ஒரு சீட்டில் அமர்ந்தபடி தன்னை பார்த்து சிரிப்பது தெரிந்தது. 'அடப்பாவி....!'  இவனைத்தான் இதுவரை என்னென்ன நினைத்து திட்டினோம்....  இவன் என்னடா என்றால்.... !

           மீண்டும் அவனை பார்க்க, அவன் இப்போதும் சிரித்துகொண்டிருந்தான்.  அவன் சிரிப்பில்...    அப்போது பற்களில் தெரிந்த அந்த கறையில்  .....
  
                      வேணுகோபாலனுக்கு அவன் அழகனாக, மனிதனாக  காட்சிதந்தான்.




                    
 
 
     

2 comments:

  1. நாம் பொதுவாக, ஒரு மனிதனின் உருவத்தைப் பார்த்து விட்டு(தவறாக) எடை போடுகிறோம்..என்பதை ரத்தினச் சுருக்கமாக எழுதியுள்ளீர்கள். இதென்னமோ , பிப் - 1979 -இல் எனக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தை நினைவுறுத்துகிறது..

    ReplyDelete
  2. உருவு கண்டு எள்ளாமை வேண்டும்..
    அழகாய் சொல்லிப் போகிறது கதை.

    ReplyDelete